யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 18 ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சிவில் விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜூலை முதலாம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்த போதிலும் அன்றைய தினமும் விமானப் போக்குவரத்து முன்னெடுக்கப்படவில்லை.