பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் மேலதிக உதவிகளை வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள அதிகமான மக்களுக்கு உணவு விநியோக திட்டங்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதோடு, மேலதிக உதவிகளையும் வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனத்தின் (IFRC) ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் திரு. அலெக்சாண்டர் மேத்யூ அவர்கள், நேற்று (13) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோதே பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனத்தின் (IFRC) ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கூறுகையில், இலங்கையில் மனிதாபிமான உதவித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு, பணக்கார நன்கொடையாளர்களின் ஆதரவை தமது அமைப்பு எதிர்பார்த்து வருவதாகவும், மனிதாபிமான உதவித் திட்டங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
சுனாமி, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின்போது செஞ்சிலுவைச் சம்மேளனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் தமது நன்றிகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க, பிரதி பணிப்பாளர் நாயகம் அருண லேகம்கே ஆகியோர் கலந்துகொண்டனர்.