நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவின் பணிப்புரையின் பேரில், மேற்கு கடற்படை கட்டளை பிரிவு இரண்டு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை இரத்தினபுரிக்கும் நான்கு குழுக்களை களுத்துறைக்கும் அனுப்பியுள்ளது.

மேற்கு கடற்படைக் கட்டளையில் மேலும் 21 நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களும், தெற்கு கடற்படைக் கட்டளையில் இதேபோன்ற ஒன்பது குழுக்களும் தேவை ஏற்பட்டால் அனுப்புவதற்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

களனி கங்கை, களு கங்கை, குடு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தேகம பிரதேசத்தில் ஜின் கங்கையில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதேவேளை, களனி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 1,620 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியொன்று வெள்ளத்தில் மூழ்கியதால் மல்வான, யபரலுவ வடக்கு, யபரலுவ தெற்கு, பியகம கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 682 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.