மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2019 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நேற்று (31) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் அமைச்சர் உட்பட 4 பேரையும் விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிஸாரால் புதைக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 திகதி இராஜாங்க அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டு கல்லடி பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்கார் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அடித்து வெளியேற்றினர் இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இணைப்புச் செயலாளர் யோ. ரொஸ்மன், இளைஞர் ஒருங்கினைப்பாளர் அனோஜன் மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் மற்றும் அருள்தாஸ் சுசிகலா ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டு தலைமையக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (31) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது இதில் எதிராளியான மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் உயிரிழந்துள்ளதுடன் வழக்கு விசாரணைக்கு பொலிஸார் தொடர்ந்து சமூகமளிக்காதமையையிட்டு அமைச்சர் உள்ளிட்ட 4 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக நீதவான் தீர்பளித்தார்.