பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை  மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட  முன்மொழிவுகளை  அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  ஜனாதிபதி எழுத்து மூலம்  அறிவித்துள்ளார்.

இந்த  முன்மொழிவுகளில், தேசிய சபையை ஸ்தாபிக்கும் நடவடிக்கை  மாத்திரமே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  இன்று  (03)    அனுப்பியுள்ள இந்த  எழுத்துமூல    அறிவிப்பில்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீண்டகால முறைமை மாற்றங்களை ஏற்படுத்தும்  நோக்கில் முன்மொழியப்பட்ட யோசனைகளில்  வங்கி விவகார  மற்றும் நிதிச் சேவைகள்  தொடர்பான குழு  (Committee on Banking and Financial Services), பொருளாதார ஸ்திரப்படுத்தல்  தொடர்பான குழு (Committee on Economic  Stabilization) மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான  குழு  (Committee on Ways and Means) ஆகியவற்றை வங்கி விவகாரங்கள் தொடர்பில் நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும் அவை இதுவரை  முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி  சபாநாயகருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கவும், பாராளுமன்ற  வரவு-செலவுத் திட்ட  அலுவலகத்தை நிறுவவும் முன்மொழியப்பட்ட போதும் அவையும் செயற்படுத்தப்படவில்லை.

இந்த  பரிந்துரைகளின்படி 17 பாராளுமன்ற துறைசார்  மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டியுள்ள  போதிலும் அவற்றுக்கான தலைவர்கள்  இது வரை நியமிக்கப்படவில்லை எனவும் அவற்றுக்கு நியமிக்கப்படும் இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல் இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இதனால் அரசாங்கம் எதிர்பார்க்கும்  முறைமை  மாற்றம் (System Change)  மிக விரைவாக எட்டப்படும் எனவும் ஜனாதிபதி   நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்துக்கான சட்டமூலத்துக்கும் அமைச்சரவை  அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, சட்டமா அதிபரின்  அனுமதியைப் பெற்ற  பின்னர்  அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசித்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள  ஜனாதிபதி , இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.