பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்களது தலைமையிலான முன்னணி தொழிலதிபர்கள் குழுவொன்று, நேற்று (3) பிரதமர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோதே பிரதமர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணைகளை துரிதமாக அங்கீகரிப்பதற்குத் தேவையான திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசு ஏலவே திட்டங்களை வடிவமைத்துள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்தன, இதன்போது கனேடிய தொழிலதிபர்களுக்கு எடுத்துக் கூறினார். பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கு இதுவரை அரசு எடுத்துள்ள படிமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்திய பிரதமர், இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டார். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும்பொருட்டு கனடாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒத்துழைப்புக்கள் அவசியமென்றும் தகவல் தொழிநுட்பம், விவசாயம், மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக கேள்விகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொண்டு பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அப்பிரதிநிதிகள் குழுவிலிருந்த சிங்கள மற்றும் தமிழ் தொழிலதிபர்கள், பிரதமரிடம் உறுதியளித்தனர். இலங்கையுடன் காணப்படும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த கனேடிய தொழிலதிபர்கள் சமூகம், இலங்கையில் இளைய தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது வர்த்தகங்களை கட்டியெழுப்புவதற்கு தாம் உதவுவதாகவும் விருப்பம் தெரிவித்தனர். வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை அங்கீகரிப்பதில் ஏற்படும் அநாவசியமான தாமதங்களை அகற்றுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதுடன், பல ஆசிய நாடுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் தமது வெளிநாட்டு முதலீட்டு நடைமுறைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.

இக்குழுவில், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹென் டொங், ரேச்சல் தோமஸ், கணேசன் சுகுமார், ஆதர் கிறவுஸ், குலா செல்லதுரை, மொஹான் பெரேரா, ஜுட் பிரான்சிஸ், சிவா சிவநாதன், இளங்கோ ரத்னசபாபதி, பிரேம் யசமனய், ரியாஸ் ரவூப், மகேஷ் அபேவர்தன, டேவிட் ஸ்டாஓ, சுதர்ஷன் ஸ்ரீயோகநாதன் மற்றும் அருண் கிருபா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.