இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவதற்கான இலங்கையின் ஆவணங்களுக்காக திருச்சி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதிகள் 4 பேரையும் நாடு கடத்துவது, இலங்கை அதிகாரிகளிடம் இருந்து பயண ஆவணங்கள் பெறுவதை பொறுத்தே அமையும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், ஆவணங்களை வழங்கியவுடன், குறித்த தண்டனைக் கைதிகள், நாடு கடத்தப்படுவார்கள். அதுவரை அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதீப் குமார் கூறியுள்ளார்.

2022, நவம்பர் 11 ஆம் திகதி இந்திய உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு பேரில், இலங்கை பிரஜைகள் நான்கு பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர். 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யுமாறு 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தமிழக அரசு சர்ச்சைக்குரிய வகையில் பரிந்துரைத்ததையடுத்து, 2022 நவம்பர் 11ஆம் திகதியன்று அவர்களை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரில் முதல்வரான பேரறிவாளனை உடல்நிலை சீரின்மை மற்றும் நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்து மே 18ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையிலேயே சில மாதங்களில் ஆறு தண்டனைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி ஸ்ரீஹரன், முருகன் என்கிற ஸ்ரீஹரன், சாந்தன், பி ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ் மற்றும் எஸ் ஜெயக்குமார் ஆகிய ஏழு குற்றவாளிகள் 1991 இல் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நளினியின் கணவர் ஸ்ரீஹரன் உட்பட நான்கு பேர் இலங்கையர்களாவர்.