சாரதிகள் செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (28) இதனை தெரிவித்த அவர் அந்த முறைமை தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்தார். தரமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், ஆனால் இந்த முறைமை அங்கீகரிக்கப்பட்டு 8 வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, 32 குற்றங்களுக்காக, 24 புள்ளிகளுக்கு உட்பட்டு இந்த புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் ஒரு வருடத்தினுள் 24 புள்ளிகளும் குறைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சாரதியின் அனுமதிப்பத்திரம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். இந்த புள்ளிக்குறைப்பு முறைகளின் கீழ், விபத்து நடந்தவுடன் சாரதியொருவர் வாகனத்தை நிறுத்தாமல், விபத்துக்குள்ளானவரை வைத்தியசாலையில் அனுமதிக்காது தப்பிச்சென்று பிடிப்பட்டால் 10 புள்ளிகள் கழிக்கப்படும். மணிக்கு 150 கிலோமீற்றர் என்ற கதிக்கு மேல் வேகமாக வாகனம் செலுத்தினால் 8 புள்ளிகள் கழிக்கப்படும். அத்துடன், வீதி விதிகளை மீறி, கவனக்குறைவாக வாகனம் செலுத்தினால் 6 புள்ளிகளும் கழிக்கப்படும். இந்த வகையில் குற்றங்களை புரிந்து 24 புள்ளிகளை இழந்தால் மீண்டும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறே, பயிற்சி காலத்தில் சாரதி ஒருவர் 12 புள்ளிகளைப் பெற்றால், ஒரு வருடத்திற்கு அவர் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுவதற்கு இந்த வகையான ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படாமையே காரணமாகும். எனவே, அடுத்த வருடத்தின் முதல் காலாண்டினுள் இந்த புள்ளிக்குறைப்பு முறைமையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.