சமஷ்டி என்ற பெயரில் நாடு பிரிக்கப்படுமாயில், பௌத்தத்தை பேணி பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர யுத்தத்தில் உயிரிழந்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்றார். நாடாளுமன்றத்தில் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் சுகாதாரம் மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிங்களவர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே. அதனை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது. நாட்டை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே பௌத்த சாசனத்தை பாதுகாக்க முடியும்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு. அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமஷ்டி என்ற பெயரில் நாடு ஒன்பது துண்டுக்களாக பிரிபடும் பட்சத்தில், வடக்கு கிழக்கிலிருந்து எவரும் பௌத்தத்தை காப்பாற்றபோவதில்லை. எனவே, ஒற்றையாட்சியை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை அழித்து, சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் பிரபாகரன் மாத்திரமன்றி பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் விரட்டியடித்தனர். சிங்களவர்களுடன் கல்விகற்று அவர்களுடன் 60 வருடங்களாக பேசிபழகிய நீதியரசர் சி.வி விக்னேஷ்வரன், வடக்கு முதல்வரானதன் பின்னர், சிங்களவர்களுக்கு வடக்கில் இடமில்லை. தமிழ் பெண்கள் திட்டமிட்டவகையில் கருத்தடை செய்யப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் செய்யக் கூடாது. சமஷ்டி என்று நாடு பிரிந்தால் பௌத்தத்தை காக்க முடியாது – மரணித்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருங்கள்என்றும் கூறினார். இவ்வாறானவர்களுடன் எவ்வாறு நாம் நல்லிணக்கம் பற்றிப் பேச முடியும். வடக்கில் நாகதீப விகாரையில் புத்தர் சிலை வைக்க அனுமதிக்காதவர், 108 அடி உயரத்தில் கோவில் கோபுரம் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. குருந்தூர் விகாரையில் தாது பிரதிஷ்ட செய்ய முயன்றபோது, அரசியல்வாதிகள் குண்டர்களுடன் வந்து தடுத்தனர். கோணகல கிராமத்தில் விடுதலைப்புலிகள் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து மீன்களை போல சிசுக்களை வெட்டி எறிந்தவேளையில் கொழும்பு கோயிலில் திருவிழா நடத்தப்பட்டது. வடக்கில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் விளக்கேற்றி நினைவுகூரப்பட்டனர். தமது மகன் ஒரு கொலைகாரன் அல்லது பயங்கரவாதி என்றால், வீட்டுக்குள்ளேயே அவர்களை நினைவுகூறுங்கள். அதற்கு எந்த தடையும் இல்லை. இறுதி யுத்தத்தில் 3 இலட்சம் தமிழர்களை பணயமாக வைத்து, விடுதலைப்புலிகள் கொலைசெய்தனர். இவ்வாறானவர்களையா நினைகூருகிறோம் என்பதை தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். கொடுமை செய்தவர்கள் இராணுவத்தினரா அல்லது விடுதலைப்புலிகளா என்று தற்போதைய இளைஞர்கள் தமது பெற்றோரிடம் கேட்டறிய வேண்டும் என்றார்.