சீனப் பிரதமர் Li Keqiang நேற்று (08) சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவைச் சந்தித்து Macro கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு சீனாவில் இடம்பெற்றுள்ளது.

உலகப் பொருளாதாரச் செயல்பாட்டில் சீனா ஒரு முன்னணி செயற்பாட்டாளர், அதன் பாதுகாவலராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட சீனப் பிரதமர், சீனா பல ஆண்டுகளாக சர்வதேச நாணய நிதியத்துடன் நல்ல ஒத்துழைப்பையும் உறவையும் பேணி வருவதாகக் கூறினார்.

அனைத்துப் பொருளாதாரக் கொள்கைகளையும் வலுப்படுத்த அனைத்து தரப்பினருடனும் சீனா ஒத்துழைப்புடன் செயற்படும் என அவர் தெரிவித்தார். கடன் நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், G20 குழுவின் “கடன் சேவை இடைநீக்க செயல்முறையை” அதே வழியில் செயல்படுத்த சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மற்ற ஜி20 நாடுகளுடன் இணைந்து நியாயமான கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனாவும் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.