நன்றி, உப சபாநாயகர் அவர்களே!

இன்று நாங்கள் மிக முக்கியமான மூன்று அமைச்சுக்களின் தலைப்பின் கீழே இந்த விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

இதிலே நிதியமைச்சு, பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்:டு அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கீழ் வருகின்றன. இவை மிக முக்கியமான அமைச்சுக்கள். ஜனாதிபதி அவர்கள் இந்த நாடு பொருளாதாரத்திலே மிகவும் பின்னடைவாக இருந்த ஒரு இக்கட்டான காலகட்டத்திலே இந்த சபையால் நிரந்தரமாக மீதிக் காலத்திற்காக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.

அவர் தெரிவுசெய்யப்பட்டபோது மக்களிடையே ஒரு நம்பிக்கை ஒன்று உருவானது, பொருளாதாரம் ஓரளவு தன்னும் முன்னேறும், வரிசைகள் இல்லாமற் செய்யப்படுமென்று. அது ஓரளவுக்கு இன்று நிறைவேறியிருக்கின்றது. அதற்காக அவருடன் இருக்கக்கூடிய அமைச்சர்கள் சிலர் மிக நன்றாக சேவை செய்துகொண்டிருக்கின்றார்கள். முக்கியமாக பிரதம அமைச்சர் அவர்களும் இரண்டு வேறு கட்சிகளாக இருந்தாலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலே அவருடைய செயற்பாடுகளில் தன்னுடைய பூரண ஒத்துழைப்பினை வழங்கி அக்கறையாக செயற்பாடுகின்றார். அதேபோல ஜனாதிபதி அவர்களுடைய செயலாளரும் மிக அனுபவம் வாய்ந்தவர், மிகவும் திறமையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியிலே இன்னும் சரியான ஒரு முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்படவில்லை.

இன்று பணவீக்கத்தை எடுத்துக்கொண்டால் மத்திய வங்கியின் வெளியீட்டின்படி 66வீதமாக இருக்கின்றது. இருந்தாலும் இப்போது குறைந்து இருக்கின்றது. இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். அதேநேரத்தில் வரிசைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. சாதாரண மக்கள் மாத்திரமல்ல அரச உத்தியோகங்களில் இருக்கக்கூடியவர்கள் கூட பொருட்களை வாங்கமுடியாத மிகவும் கஸ்டகரமான நிலையிலே வாழ்கின்ற ஒரு நிலைமைதான் இருக்கின்றது. இதற்கு சொல்லப்படும் ஒரு காரணம் உலகம் முழுக்க இந்த நிலைமைதான் இருக்கின்றது என்று. அதிலே உண்மை இருக்கின்றது. நாங்கள் அதை மறுக்கமுடியாது. இந்த ரஸ்ய உக்ரைன் யுத்தத்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் உலகம் முழுவதையும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அதையும் நாங்கள் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் இப்போது இங்கு நீண்ட வரிசைகள் இல்லாமல் இருக்கின்றது. அதேபோல மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை.

தேசிய கொள்கை வகுத்தலிலே தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அல்லது வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற மக்களைப் பொறுத்தமட்டில், எந்தவிதமான பங்களிப்பும் அதில் கிடையாது. தேசிய கொள்கை வகுத்தலை தெற்கே அரச கட்சி அல்லது தெற்கிலே இருக்கக்கூடிய கட்சிகள் தான் வகுக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் வகுக்கின்றபோது வடகிழக்கினுடைய செயற்பாடுகளை சரியான முறையிலே கவனத்தில் எடுத்துக் கொள்வது குறைவாகவே இருக்கின்றது. இந்த நாட்டிலே வடக்கை எடுத்துக் கொண்டால் ஒரு காலத்திலே மீன்பிடியில், விவசாயத்தில் முக்கியமாக இந்த சிறுபயிர்கள் இவைகளிலே உச்சந்தொட்ட உற்பத்திகள் இருந்துகொண்டிருந்தன. முக்கியமாக வடக்கிலே இருந்து ஏறக்குறைய இலங்கை முழுவதிலுமே பிடிக்கப்பட்ட மீன் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி அங்கிருந்து நாளாந்தம் தெற்குநோக்கி வருவதை சிறுவனாக நானே பார்த்திருக்கின்றேன். புதினைந்து இருபது லொறிகளிலே மீன் தெற்குநோக்கி வருவதைப் பார்த்திருக்கின்றேன். அதேபோல சிறுபயிர்கள் வருவதையும் பார்த்திருக்கின்றேன். இவைகளெல்லாம் யுத்தத்தினால் தான் பின்னடைவைக் கண்டிருந்தாலும், யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் இவைகளை சீரமைக்க முடியாத ஒரு நிலைமையே இருக்கின்றது.
ஒரு சரியான தேசியக் கொள்கை இருக்கின்றபோது மீன்பிடி, விவசாயம் இவைகளுக்கும் ஒரு சரியான கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதை சரியான முறையிலே நடைமுறைப்படுத்த வேண்டும். அதை சரியான முறையிலே வழி நடத்துவதன் மூலம் தான் நாங்கள் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை மீண்டும் முன்னெடுக்க முடியும். முக்கியமாக சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நிதிகளிலும், ஏற்றுமதி இறக்குமதி நிதிகளிலும் நாங்கள் தங்கியிருக்கின்றோம். ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலே இருக்கக்கூடிய வித்தியாசத்தைக் குறைக்கவேண்டும் என்பது உண்மை. அதேநேரத்திலே இந்த சிறு கைத்தொழில்களில் ஈடுபடக்கூடியவர்களுடைய தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையிலே அவர்களுக்காவது சலுகைககள் கொடுக்கப்பட்டு அவர்களுடைய மூலப்பொருள்களை கொடுப்பதற்கான முயற்சிகள் முழுமையாக எடுக்கப்பட வேண்டும்.

அதேநேரத்தில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவது தவறு என்று கூறவில்லை. அதேநேரத்தில் மற்றைய விடயங்களையும் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும். அப்படி எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நாட்டினுடைய உற்பத்தியைப் பெருக்க முடியும். இதை சரியான முறையிலே செயற்பட வேண்டுமென்றால் இந்தநாட்டிலே இருக்கக்கூடிய அனைத்து இன மக்களும் ஒன்றாக இந்த பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமாக செயற்பட வேண்டும். அதற்கு தாங்களும் இந்த நாட்டிலே சமமாக மதிக்கப்படுகின்ற ஒரு மக்கள் என்று அவர்கள் நம்பவேண்டும். ஒரு சமஸ்டிப் பொருளாதாரம் நாடு முழுவதற்கும் உருவாக்கப்படுவதன் மூலம் தான் நாடு முழுவதும் வளர்ச்சி காணுகின்றபோது பொருளாதார வளர்ச்சி இந்த நாடு இந்த பொருளாதார சிக்கிலில் இருந்து மீண்டு வரும். இதுதான் இன்றைய யதார்த்தம், இதை செய்வதற்கு தயங்கக்கூடாது.

இன்று ஜனாதிபதி அவர்கள் ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், தமிழ் கட்சிகளுடன் பேசுவது சம்பந்தமாகவும் சொல்லியிருக்கின்றார். இப்படி பல விடயங்களை அவர் தொடர்ந்து சொல்லி வருகின்றார். இதிலே கட்சி பேதமின்றி அனைவருமாக ஒத்து முதலாவதாக இந்த அரசியல் பிரச்சினைக்கு ஒரு நியாயமான ஒரு தீர்வைக் காணவேண்டும். ஒரு நியாயமான தீர்வு என்று கூறுகின்றபோது எங்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு சமஸ்டி அமைப்பாக இருக்க வேண்டுமென்பதிலே எந்த ஐமிச்சமும் கிடையாது. இருந்தாலும் இன்று சட்டத்திலே இருக்கக்கூடிய இந்த அதிகாரப்பரவலாக்கலைச் செய்வதன் மூலமும், மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதன்மூலமும் அதனூடாக அதிகாரத்தைப் பகிர்ந்து அந்த அதிகாரம் சரியான முறையிலே பகிரப்பட்டு உண்மையாக முழுமையாக மாகாணசபை முறைமைகள் அமுலாக்கப்பட்டு வடகிழக்கும் மற்றைய பகுதிகளும் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியைக் காணுகின்றபோதுதான் இந்த பின்னடைவுகளை நாங்கள் சரிக்கட்ட முடியும். இதற்கு இந்த பாராளுமன்றத்திலே இருக்கக்கூடிய அனைவருமே முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அதற்கு வெளிநாட்டிலே இருந்து முதலீட்டை எதிர்பார்க்கின்றோம். அதேபோல மற்றவர்களுடைய முதலீடுகளையும் எதிர்பார்க்கின்றபோது அவர்கள் இங்கு முதலீடுகளைக் கொண்டுவருகின்றபோது அவர்களுக்கு இருக்கின்ற தடைகளை தடைகளை நிறுத்தவேண்டும். அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு எட்டு இடங்களால் செல்ல வேண்டியிருக்கின்றது. ஆகவே அந்த தடைகளை நிறுத்தவேண்டும். முக்கியமாக அவர்கள் சுலபமான வழியியே தங்களுடைய முதலீடுகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டிலுள்ள தமிழர்களும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொண்டுவர வேண்டும். இவைகளெல்லாம செய்வதன்மூலம் இந்த நாட்டில் சுபீட்சத்தை நோக்கி செல்லமுடியும். இதன்மூலம் பொருளாதார பிரச்சினையை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கேனும் சரிசெய்ய முடியுமென்று கூறி முடிக்கின்றேன். நன்றி வணக்கம்.