சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என்று கிசுகிசுக்கப்பட்ட போதும் அமைச்சர்கள் நியமனம் தாமதமாகும் என்று தெரியவருகிறது
புதிதாக 12 அமைச்சர்களை அமைச்சரவைக்கு நியமிக்கும் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியிருந்தது.
எனினும் அந்த விடயம் தொடர்ந்தும் தாமதமாகி வந்த நிலையில்,12 அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குப் பின்னர் நடைபெற வாய்ப்புள்ளதாக அறியமுடிகிறது.
அமைச்சரவை தற்போது 18 உறுப்பினர்களைக் கொண்டதுடன், அரசியலமைப்பின் படி மேலும் 12 அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.
அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியான ஏ.எல்.எம்.ஏ.அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. .
மிகுதி அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிமுடிகிறது.