வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 02 நாட்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ​வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கடந்த 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 802 மாடுகளும் 34 எருமை மாடுகளும் 256 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

கால்நடைகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இதுவரை கிடைத்த தரவுகளின் படி, அவை திறந்த வௌியில் தங்கியிருந்த போது நிலவிய கடுமையான குளிரினால் ஏற்பட்ட மன அழுத்தமே, உயிரிழப்பிற்கான காரணம் என தெரியவந்துள்ளதாக வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டார்.

கால்நடைகளின் மரணம் தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.