அச்சுவேலி-இடைக்காட்டை பிறப்பிடமாககொண்ட தோழர் அசோகன் 1983இன் பிற்பகுதிகளில் சென்னையில் மேற்படிப்பை தொடர்துகொண்டிருந்தபோது கழகத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழீழ மாணவர் பேரவையை(TESO) வளர்த்தெடுப்பதில் தோழர் கேசவன் (சயந்தன்), தோழர் காசி, தோழர் மைக்கேல் உடன் இணந்து முக்கிய பங்கினை வகித்திருந்தார்.

TESOவின் வெளியீடான “பொங்கும் தமிழமுது” சஞ்சிகையை அக்காலத்தில் தொடர்ந்து வெளியிடுவதில் அக்கறை கொண்டிருந்தார்.

மாணவர் அமைப்பின் தேவைகளுக்காக “இசைநிகழ்ச்சிகள்”, நட்சத்திர இரவு” போன்றவற்றை நடாத்தி வருமானத்தை தேடிக்கொள்வதிலும் ஈடுபட்டவர். பின்னர் அவர் புலம்பெயர்ந்து கனடா சென்றிருந்தபோதிலும், இந்தியாவில் தொடர்புகளற்று கஸ்டத்தில் இருந்த பல தோழர்களுக்கு உதவிகளை தாமாக செய்திருக்கிறார்.

எல்லோருடனும் அன்பாகவும் நட்புடனும் பழகிய தோழர் அசோகன், 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் முகாம்களில் அடைக்கப்பட்ட வன்னி மக்களுக்கும், படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் இருந்த மக்களுக்கும் கனடாவில் முன்னின்று புலம்பெயர் மக்களிடம் உதவிகளைப் பெருமளவில்பெற்று கழத்தினூடாக அதனை அவர்களுக்கு கிடைக்கச் செய்திருந்தார்.

எந்த வேலையை பொறுப்பெடுத்தாலும் அதனை செய்துமுடிப்பதில் தன்னை மிகத்தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வது அவரது இயல்பு.

ஒரு செயல்வீரன் ஓய்வுக்கு சென்றுவிட்டான். இழப்பு எம் சமூகத்துக்கே. மரணம் நிச்சயமானதுதான் என்றாலும், மரணத்துக்கான வயது இப்போது அசோகனுக்கு என மனம் ஒப்புதில்லை.

ஆழ்ந்த துயருடன் விடை தருகின்றோம். சென்று வா தோழனே!?