சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். இங்குள்ள சிறுபான்மை சமூகங்களில் இருந்து உங்களுக்கு எவ்வாறான ஆதரவு கிடைக்கிறது? எதிர்காலத்திலும் இதேபோன்ற ஆதரவை அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா என வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, இலங்கையும் இந்தியாவும் உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளாக உள்ளன. அங்கு மக்கள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுப்பதுடன், பதவி நீக்கவும் செய்துள்ளனர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு அப்படியே உள்ளது. மேலும், ஒவ்வொரு அரசாங்கமும் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களின் வாழ்க்கை, பாதுகாப்பு, அத்துடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி போன்றவற்றில் சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.இலங்கை அரசியலமைப்பின்முன், அனைவரும் சமம்.தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் எவரும் சவால் விடலாம்.
ஆகவே, கடந்த சில மாதங்களில் நிலவிய ஜனநாயக அமைதியின்மைக்கு பதிலளிப்பதில் இப்போது அதிக நம்பிக்கை உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் யாராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மக்கள் மத்தியில் எங்கள் நம்பிக்கையை முழுமையாக மீட்டெடுத்துள்ளோம். எங்கள் குடிமக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்த எங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை எங்களால் மீண்டும் கொண்டு வர முடிந்தது.
அரசாங்கத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை உள்ளதுடன், நாட்டின் வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளுடனும், எதிர்க்கட்சிக்குள் இருக்கும் அரசியல் குழுக்களுடனும் நாங்கள் இணைந்து செயற்படுகின்றோம். எவருக்கும் பாரபட்சம் கிடையாது. வடக்கு மக்களோ அல்லது தமிழ் பேசும் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ என அனைவரும் முன்வைத்த வேறு சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.