திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ், மாலை 6 மணியளவில் ஏ9 வீதியின் பளை முள்ளியடி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டு விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் வரையில் காயமடைந்து, பளை பிரதேச வைத்தியசாலையிலும் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது, இரண்டு இ.போ.ச பஸ்கள் போட்டி போட்டு வேகமாக பயணித்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தோர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.