
இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. சுமார் 65ஆயிரம் வீடுகள் முற்றாக அழிவடைந்ததுடன், 38ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 23ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்தன.
காலி ஹிக்கடுவையில் கொடூரமான ரயில் விபத்தையும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. ரயிலில் பயணித்த சுமார் 1500பேரில் 1000பேர்வரை பலியாகினர். அநேகர் காணாமற் போயினர். இந்த ஆழிப்பேரலை தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறவுகளை இழந்து, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகினர்.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 இலிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
சுனாமியால் உயிரிழந்தோர்க்கு எமது இதயபூர்வ அஞ்சலிகளை சமர்ப்பிப்பதோடு அவர்களின் ஆத்மா சாந்தி பெற வேண்டுகிறோம்.