யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த இளைஞன் ஒருவர் திடீர் சுகயீனமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், இளைஞன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக் கொண்டமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த இளைஞனும், அவரது நண்பர்கள் மூவருமாக போதைப்பொருளினை ஊசி மூலம் உடம்பினுள் உட்செலுத்திக்கொண்டுள்ளனர்.
அவ்வாறு அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்டமையால் , மயக்கமுற்று விழுந்த இளைஞனை, போதையில் மயங்கி உள்ளதாக நினைத்து, போதை தெளியும் என காத்திருந்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் ஆகியும் இளைஞன் அசைவற்று காணப்பட்டமையால் , இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை , யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலமாக உட்செலுத்தியதில் இதுவரை 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனவும், உயிரிழந்தவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.