யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் 2022 டிசம்பர் 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்பது நாட்களுக்கு பின்னர் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இரண்டு வருடங்களுக்கு பின்னர் இராஜினாமா செய்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ். மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.