31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
தோழர் கரவை ஏ.சி.கந்தசாமி (கரவை அங்கிள்) அவர்கள்
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் நீண்டகாலமாக தன்னை இணைத்து செயற்பட்டு வந்தார்.

இடதுசாரி கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டு செயற்பட்டுவந்த தோழர் கரவை கந்தசாமி அவர்கள் சிங்கள சமூகத்தின் முற்போக்கு சக்திகளின் நண்பனாகவும் திகழ்ந்தார்.
ஒடுக்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளுக்காகவும், அரசியல் அபிலாசைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வந்த அவர், மும்மொழிகளிலும் கொண்டிருந்த ஆற்றலை தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை தென்னிலங்கை சிங்கள சக்திகளுக்கு எடுத்துரைப்பதில் பயன்படுத்தி வந்தார்.
1983ற்குப் பின்னர் தமிழ் மக்களின் போராட்ட வடிவம் மாற்றம் கண்டபோது தனது செயற்பாட்டையும் மாற்றிக் கொண்ட அவர் ஆயுதப் போராட்ட அமைப்புகளுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டதோடு புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவராக இறுதி மூச்சுவரை செயலாற்றினார்.
தொண்ணூறுகளில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாட்டில் காத்திரமான பங்கை வகித்த அவர், கொழும்பிலும் அண்மைய பிரதேசங்களிலும் கைதாகும் அப்பாவித் தமிழ் மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளில் முனைப்புடனும் அக்கறையுடனும் செயற்பட்டு பலரை விடுவித்துத் தந்தார்.
கிழக்கில் படையினரில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் தங்கியிருந்த நலன்புரி நிலையங்களுக்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு அங்கு நிலவும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதிலும் வடகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைளை மேற்கொள்வதிலும் அயராது பாடுபட்டு வந்தார்.