சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான கடும்போக்குவாதிகள் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இலக்காகக்கொண்டு தற்கொலை தாக்குதல் நடத்தவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகிய பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்க தவறியதால் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும்  முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்த நட்டஈடுகளை அறவிட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக 6 மாதங்களுக்குள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை மேற்பார்வையிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.