இன்று ஆறு தமிழ்க் கட்சிகள் கூடி எதிர் வருகின்ற பிரதேச சபைத் தேர்தல் சம்பந்தமாக யாழ்ப்பாணத்தில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தன. இந்த ஆறு கட்சிகளும் ஒன்றாக செயற்படுவது பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டபோது, அதில் க.வி விக்னேஸ்வரன் அவர்கள் தன்னுடைய கட்சியின் மான் சின்னத்திலேதான் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியபோது மற்றைய கட்சிகள் உங்களுடையது புதிய சின்னம் அது பதிவுசெய்யப்பட்டு ஆறுமாதங்கள் கூட ஆகவில்லை என்று தெரிவித்ததோடு, ஒரு பொதுவான சின்னத்திலே போட்டியிட வேண்டும் எனவும், இதற்கு அனைவரும் இணங்கினால் சேர்ந்து செய்யலாமென வலியுறுத்தியிருந்தார்கள்.
ஆயினும் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தன்னுடைய கட்சி சின்னத்திலேயே கேட்க வேண்டுமென்றும் அவ்வாறு கேட்க முடியாவிட்டால் தான் விலகுவதாகவும் கூறி விலகியிருக்கின்றார். மற்றைய ஐந்து கட்சிகளும் தாங்கள் பொதுவான ஒரு சின்னத்திலே கேட்பதாக தீர்மானித்து அந்த பொதுச் சின்னம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி என ஐந்து கட்சிகளுமாக நாளை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டு எதிர்வரும் தேர்தலிலே எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பான ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடவுள்ளன.