திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடு நடவடிக்கைகளை செல்லுபடியற்றதாக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் W.M.R. விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை கூறியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ். துரைராஜா மற்றும் ஜனக்க டி சில்வா ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, திட்டமிட்டவாறு உரிய நேரத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

மனுவில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு மனு, எதிர்வரும் 18 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், இந்த மனுவை அன்றைய தினம் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதனடிப்படையில், குறித்த மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.