இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கனேடிய அரசாங்கம் விதித்திருக்கும் தடையை இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட முற்போக்கு நாடுகளும் பின்பற்ற வேண்டுமென உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை வரலாற்று தீர்மானம் எனவும் உலகத் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிக்காக அமெரிக்கா, கனடா முன்னெடுக்கும் தீர்மானங்களைப் பாராட்டுவதாக உலகத் தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.

அரசியல், அரச சார்பற்ற நபர்கள், அமைப்புகள், இலங்கையைச் சேர்ந்த மற்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், புலம்பெயர் தமிழர்கள், யுத்த குற்றங்களை வௌிக்கொண்டு வர முன்னிற்கும் அனைவருக்கும் நன்றிகளையும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், லண்டன், தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஏனைய முற்போக்கு நாடுகளும் கனடாவின் தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும் என உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கனேடிய வௌிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி கடந்த 10ஆம் திகதி சிறப்பு பொருளாதார நடவடிக்கை சட்டத்தின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட தடைகளின் பிரகாரம், விதித்த தடையை வரவேற்பதாகவும் குறித்த அறிக்கை தொடர்கின்றது.