யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரை தெரிவு செய்யும் கூட்டம் கோரம் (Quorum)இல்லாமையினால் இன்று ஒத்திவைக்கப்பட்டது. யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள இடைக்கால  முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை  நடைபெற்றது.

யாழ். மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில், இன்றைய கூட்டத்திற்கு 24 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

இதன்போது,  உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதனால்  முதல்வருக்கான முன்மொழிவுகள் கோரப்பட்டன.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டதையடுத்து, அதற்கு  ஆட்சேபனை  தெரிவித்த EPDP-இன் M.ரெமீடியஸ் சபையிலிருந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில், இடைக்கால முதல்வர் பதவிக்கான தெரிவை தொடர்ந்து நடத்துவதற்கு கோரம்  இல்லாமையினால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  தோல்வியடைந்ததையடுத்து, முன்னாள்  மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன் அண்மையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.