இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவ்வளர்ச்சியானது தற்போது உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருக்கின்றது என்று சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப்பணிப்பாளர் அலெஜான்ரோ அல்வாரெஸ் டி லா காம்பா தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப்பணிப்பாளராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அலெஜான்ரோ அல்வாரெஸ் டி லா காம்பா மேலும் கூறியதாவது:
இலங்கை தற்போது அதன் வரலாற்றிலேயே மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. நுண்பாகப்பொருளாதார ரீதியில் நோக்குகையில் தற்போதைய நிலைவரம் மிகவும் சவால்மிக்கதாகவே காணப்படுகின்றது.
இப்போது உள்ள வளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியைப் பதிவுசெய்யும். இருப்பினும் இந்த வளர்ச்சியானது தற்போது மேற்கொள்ளப்படவேண்டிய சில கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருக்கின்றது.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள கடனுதவியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய அவசியமான மறுசீரமைப்புக்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
அவற்றில் சில முக்கிய மறுசீரமைப்புக்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. அம்மறுசீரமைப்புக்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவது இன்றியமையாததாகும்.
மேலும் வரிவருமானம் அதிகரிக்கப்படுவதை உள்ளடக்கிய இறைக்கொள்கை மறுசீரமைப்புக்கள், வெளிநாட்டுக்கையிருப்பை சாதகமான மட்டத்தில் பேணுதல், மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்ற சில பொருட்கள், சேவைகளுக்கு மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவகையில் விலைகளை நிர்ணயித்தல், சந்தையால் நிர்ணயிக்கப்படும் நாணயமாற்றுவிகிதம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.
தனியார்துறையின் ஊடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் வேலைவாய்ப்புக்களும் ஊக்குவிக்கப்படாவிடின் நாம் எதிர்பார்ப்பதுபோல் நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தமுடியாது.
அதேவேளை முதலாவதாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படவேண்டியது அவசியமாகும்.
அதன்படி அந்நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிப்பதுடன், அவற்றின் முகாமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துவருகின்றது. இரண்டாவதாக நிதியியல் துறையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அதில் மத்திய வங்கியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய வங்கிச்சட்டமும் முக்கிய பங்காற்றுகின்றன. மூன்றாவதாக தனியார் வர்த்தக செயற்பாடுகளும், நான்காவதாக அரச – தனியார் பங்குடமை கட்டமைப்புக்களும் உரியவாறான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
குறிப்பாக சக்திவலு, உட்கட்டமைப்பு, நீர்வழங்கல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியாரின் வலுவான பங்களிப்பு மேலும் ஊக்குவிக்கப்படவேண்டியது அவசியமாகும்.
தெற்காசியப்பிராந்தியத்தைப் பொறுத்தமட்டிலே கடந்த 1991 – 1992 ஆம் ஆண்டளவிலே இந்தியா இதனையொத்த வெளிநாட்டுக்கையிருப்புப் பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. அதேபோன்று இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இத்தகைய நெருக்கடிக்கு முகங்கொடுத்தன.
அந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வர்த்தகத்துறையைப் பன்முகப்படுத்தல், முதலீடுகளை ஒழுங்குபடுத்தல் என்பன உள்ளடங்கலாக அந்நாடுகளால் கையாளப்பட்ட உத்திகள் இலங்கைக்குப் பயனளிக்கக்கூடியனவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.