திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார, சமூக விடயங்கள் மற்றும் முதலீடு தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் இந்திய வௌிவிவகார= அமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அந்த திட்டத்திற்குள் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளும் அடங்குவதாக அவர் கூறினார்.

அது தொடர்பில் உடன்படிக்கைகள் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை எனவும் வௌிவிவகார அமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, கலாநிதி S.ஜெய்சங்கர் பல இராஜாங்க அமைச்சர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

திருகோணமலையை எரிசக்தி ஏற்றுமதி மத்திய நிலையமாக மாற்ற வேண்டும் எனவும் அது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சர் விசேட கவனம் செலுத்தியதாகவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.

இதேவேளை இந்திய வௌிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய ஊடங்களும் செய்தி வௌியிட்டுள்ளன.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அதிக முதலீடு செய்யப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ள விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகThe Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.