நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணையை சேர்ந்த 62 வயதான சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹல் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த நால்வரின் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன.

ரதெல்ல விபத்தில் காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் இருந்து இன்று பிற்பகல் வீடு திரும்பியதாக நுவரெலியா வைத்தியசாலை பணிப்பாளர் மகேந்திர சேனாநாயக்க தெரிவித்தார்.

6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்  4 பேர் தொடர்ந்தும் நுவரெலியா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பஸ் விபத்தையடுத்து நானுஓய – ரதெல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலா சென்ற பஸ், நேற்றிரவு வேன் மற்றும் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர்.

விபத்திற்குள்ளான வேன், ஹட்டன் – டிக்கோயாவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்துள்ளது. விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 55 வயதான தந்தை, 45 வயதான தாய், 13 மற்றும் 8 வயதான இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொரு மகள் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த குடும்பத்தலைவரின் சகோதரரின் 14 வயது மகனும் உயிரிழந்துள்ளார். அத்துடன், டிக்கோயா குடாகம பகுதியை சேர்ந்த 25 வயதான வேனின் சாரதியும் நானுஓயாவை சேர்ந்த  25 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் விபத்தில் உயிரிழந்தனர்.

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக விபத்துகள் இடம்பெறுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எச்சரிக்கை பலகையும் போடப்பட்டுள்ளது.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்காக 7 பஸ்கள் பயணித்துள்ளன. விபத்திற்குள்ளான பஸ்ஸில் 43 மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 53 பேர் பயணித்துள்ளனர்.

ஹொரணையை சேர்ந்த 62 வயதான ஒருவரே குறித்த பஸ்ஸை செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

பஸ்ஸின் சாரதி சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.