இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில்  ஆணைக்குழுக்கள் முன்வைத்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது.

2021 ஜனவரி மாதம் 21 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. நாட்டில் மனித உரிமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளை ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைக்க இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

உதாகம, பரனகம உள்ளிட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளதுடன், 300-க்கும் மேற்பட்டவர்களிடம் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது வரையில்,  இரண்டு இடைக்கால அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர்  தெரிவித்தார்.