உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. அதனையடுத்து மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் , அராசங்கம் அதற்கு தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியே இதற்கான காரணம் என்றும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது. தேர்தலுக்கான தினம் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் , அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளமை , ஏனைய உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே தற்போது தபால் மூல வாக்களிப்பிற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.