கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை தடுக்கும் உத்தரவை இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷரான் குணரத்ன ஆகிய மூவர் அடங்கிய குழாமினால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், உயர் நீதிமன்றத்தில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் சார்பில் மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் ஜயசூரிய, இன்றைய தினம் வரையில், மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை நேற்று வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்தும் நீடிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கைக்கு, இலங்கை மின்சார சபையின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா ஆட்சேபனை வெளியிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் வழக்கின் ஆவணத்தை; பரிசீலித்த நீதியரசர் காமினி அமரசேகர, இன்றைய தினம் மனு ஆராயப்படும் சந்தர்ப்பம் வரையான காலப்பகுதிக்கு மாத்திரமே குறித்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதிக்குள், மின்சாரம் துண்டிக்கப்படுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவினை பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனுவொன்றின் ஊடாக விடுத்த கோரிக்கையினை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.