நன்றி சபாநாயகர் அவர்களே
நேற்று முன்தினம் ஜனாதிபதி, அவர்களுடைய கொள்கைப் பிரகடன உரையிலே பல விடயங்களை சுட்டிக்காட்டினார். இந்த நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தது. இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தான் எடுக்கின்ற முயற்சிகள். அது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சம்பந்தமாகவும் பல விடயங்களை எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன் அவர் ஒரு விடயத்தைக் கூறினார். பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் சில இளைஞர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியதாகவும், இளைஞர்கள் அவருக்குக் கூறிய காரணம், நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த விடயங்கள் காரணமாக நாட்டின் எதிர்காலம் சம்பந்தமாக தாங்கள் நம்பிக்கை இழந்திழருப்பதாகவும் கூறியிருந்ததாக கூறினார். அது மாத்திரமல்ல சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலே சில இளைஞர் யுவதிகள் அவர்களுடைய கருத்துக்களையும் வாசித்து அந்த இளைஞர் யுவதிகள் தாங்கள் இந்த நாட்டை விட்டு செல்லாமல் இருப்பதற்கான காரணங்களையும் அதாவது எப்படியும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற காரணங்களை கூறியிருப்பதையும் கூறினார். அதைப் பார்த்து மகிழ்வுறுவதாகவும் கூறினார்.

ஆனால் சண்டே ரைம்ஸ் ஜனாதிபதி அவர்கள் சண்டே ரைம்ஸ்சை மாத்திரமல்ல அல்லது இங்கு இருக்கக்கூடிய ஆங்கில சிங்கள் பத்திரிகைகளை மாத்திரமல்ல தமிழிழே வரக்கூடிய கருத்துக்களையும் அவர் தன்னுடைய அதிகாரிகள் மூலம் கேட்டு, அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் தமிழ் பத்திரிகைகளிலே வருகின்ற கருத்துக்கள் வடகிழக்கு இளைஞர்களுடைய கருத்துக்களாகும். அவர்களுடைய ஆதங்கங்களாகும். அவர்கள் ஏன் நாட்டை விட்டு ஓடுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்ற காரணங்களை மிகத் தெளிவாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருகின்றார்கள்.

இந்த நாட்டிலே இருக்கக்கூடிய இனப்பிரச்சினை தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அந்த இளைஞர்களுக்கு எதிர்காலமற்று இந்த நாடு பொதுவாகவே பொருளாதாரப் பிரச்சினையில் மாட்டுப்பட்டு அதிலே இந்த நாடு முழுக்க பிரச்சினையில் இருந்தாலும், அதிலே வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று கிடையாது. அனைவருமே இந்தப் பொருளாதாரப் பிரச்சினையிலே மிகப் பெருயளவிலே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதைவிட விசேடமாக தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு வருங்காலம் இல்லாத ஒரு தன்மையைத்தான் அவர்கள் பார்க்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் தங்களுடைய எதிர்காலம் இங்கு இல்லை. அவர்கள் ஒரு இரண்டாந்தரப் பிரஜைகளாக, இந்த நாட்டுப் பிரஜைகளாக கருதப்படுவதில்லை என்றே கருதுகிறார்கள். ஆதனால்தான் அவர்கள் ஓடுவதற்கு இருக்கின்றார்கள். அதை நிவர்த்தித செய்யவேண்டியது ஒரு கட்டாயமான தேவையாகும். எழுபது வருடங்களாக இந்த நாட்டிலே இருக்கக்கூடிய தமிழ் மக்கள் மிகவும் அரசியல் ரீதியாக மொழி ரீதியாக பாதிக்கப்பட்டு பின்னடைவைக் கண்டுகொண்டு இருக்கிறார்கள். அதற்கு நியாயமான தீர்வு ஒன்றைக் காணவேண்டியது கட்டாயமாகும்.

இதற்கு ஒரு தீர்வாக 13ஆவது திருத்தத்தை அவர் நேரடியாக 13ஆவது திருத்தம் என்று சொல்லாவிட்டாலும் அதற்கு முந்திய பல இடங்களிலே 13ஆவது திருத்தத்தைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். சில வேளைகளிலே 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்துவதாக கூறியிருக்கின்றார். பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட எல்லா விடயங்களும் அதிலே வரக்கூடிய அனைத்தையும் அமுல்நடத்துவதாகவம் கூறியிருக்கின்றார்.

முந்தையநாள் பேச்சிலே, பொலிஸ் அதிகாரம் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அது மாத்திரமல்ல ஒற்றையாட்சிக்கு கீழ் தான் தீர்வ என்பதையும் கூறியிருக்கின்றார். தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கடந்த எழுபது வருடங்களாக ஒரு சமஸ்டி ஆட்சிதான் எங்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு. நாங்களே எங்களுடைய அலுவல்களை மத்திய அரசின் தலையீடு இன்றி பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று ஒரு சமஸ்டி அமைப்பையே கடந்த எழுபது வருடங்களாக கோரி நிற்கின்றார்கள்.

ஆனால், இந்த 13ஆவது திருத்தம் இன்று அரசியலமைப்பிலே இருக்கின்ற ஒரு விடயம். நாங்களும் கூறுகிறோம். நீங்கள் 13ஆவது திருத்தத்தை அமுல்நடத்துங்கள் என்று. ஆனால் இந்த 13ஆவது திருத்தத்தை அமுல்நடத்துவது என்று ஜனாதிபதி அவர்கள் கூறிய உடனேயே நாடு முழுக்க குழம்பியிருக்கின்றது. அரசியல்வாதிகள் சொல்லுகிறார்கள் தாங்கள் இதை ஏற்கின்றோம் என்று. ஒரு சிலர் இதை எதிர்ப்பதாக கூறுகிறார்கள். அதேபோல பௌத்த பிக்குகள் வீதியிலே வருகிறார்கள். 13ஆவது திருத்தத்தை நெருப்பிலே போட்டு எரிக்கின்றார்கள். அது மாத்திரமல்ல. இவர்களாவது பொதுமக்களுடன் தொடர்புடையவர்கள் என்று வைப்போம்.

அரசாங்கத்தின் ஆளுநராக இருக்கக்கூடியவர் ஜனாதிபதி அவர்களுடைய நேரடிப் பிரதிநிதியாக இருக்கின்றவர் கிழக்கு மாகாண ஆளுநர் அவர் சொல்லுகிறார். இந்த 13ஆவது திருத்தத்தை அமுல்நடத்தக் கூடாது என்று. 13ஆவது திருத்தத்தின்மூலம் வந்த மாகாண சபைகள். ஆந்த மாகாண சபைக்கு ஆளுநராக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டவர், ஜனாதிபதி அவர்களுடைய அதிகாரத்தை அங்கு கொண்டிருக்கின்றவர். அவர் 13ஆவது திருத்த அமுலாக்கலை தான் எதிர்ப்பதாக. கூறுகிறார், அதுகூடப் பரவாயில்லை. அவர் அதைச் சொல்லிவிட்டு, தொடர்ந்தும் ஆளுநராக இருக்கின்றார். இந்த நாடொன்றிலேதான் இது நடக்கக்கூடியதாக இருக்கும். அரசியலமைப்பிலே இருக்கின்ற ஒரு விடயத்தை அமுலாக்காதீர்கள் என்று சொல்லுகின்ற ஒரு ஆளுநர் தொடர்ந்தும் ஆளுநராக இருப்பது இந்த நாடொன்றிலேதான் நடக்கமுடியும் இந்த நாட்டிலேதான் ஒரு அரசியலமைப்பை அமுலாக்காதீர்கள் என்று சொல்லுகின்ற விடயமும் நடக்கும். வேறு எங்குமே இது நடக்க முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் மிகத் தெளிவாக, ஒரு சமஸ்டி ஆட்சி மூலம்தான் மீளப்பெறமுடியாத அல்லது மத்திய அரசினுடைய தலையீடு இல்லாத ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்பதை மிக நீண்ட காலமாக நாங்கள் கோரிவருகின்றோம். இதற்கு மக்கள் ஆணையையும் தொடர்ந்து கொடுத்து வருகின்றார்கள். ஏறக்குறைய 56ஆம் ஆண்டு தேர்தல் தொடக்கம் இன்றுவரை அது எ;நதக் கட்சியாக இருந்தாலும், போட்டி போடுகின்ற தமிழ் மக்களிலே அனைத்துக் கட்சிகளுமே சமஸ்டி அமைப்பைக் கோரியே போட்டியிடுகின்றன. இதற்கு மக்கள் வாக்களிக்கின்றார்கள். ஆகவே எழுபது எண்பது வீதிமான தமிழ் மக்கள் இதைத்தான் மிக நீண்ட காலமாக கோரி நிற்கின்றார்கள்.

ஆகவே இதை தென்னிலங்கையிலே இருக்கின்ற அரசியல்வாதிகள் நன்றாக உணரவேண்டும். இந்த பொருளாதாரப் பின்னடைவுக்கு கடந்த காலத்திலே நடந்த இந்த யுத்தம் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்த யுத்தத்தின் காரணம் என்ன என்பதையும் இவர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்த யுத்தத்தின் காரணம் ஆரம்பத்திலே சாத்வீக ரீதியிலே போராட்ட்ஙகள் நடத்தப்பட்டன. பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஓப்பந்தங்கள் நடத்தப்பட்டன. பண்டா செல்வா ப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இப்படி பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் எந்த ஒப்பந்தமம் நிறைவேற்றப்படவில்லை.

பின்பு 87இலே இந்திய அரசின் நல்லிணக்கத்துடன் இந்திய இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடகத்தான் இந்த 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த 13ஆவது திருத்தத்தை பலர் எதிர்க்கின்றார்கள். கூடாது என்கின்றார்கள். தென்னிலங்கையில் மாத்திரமல்ல வடகிழக்கிலும் எதிர்க்கின்றார்கள். இருவரும் எதிர்ப்பதற்கான வேறுபட்ட காரணம் இருக்கின்றது. வடகிழக்கிலே இருக்கின்ற கட்சிகள் எதிர்ப்பதற்கான காரணம் அது போதாது. ஓற்றையாட்சிக்குள் வருகின்ற தீர்வை நாங்கள் ஏற்கமுடியாது என்ற காரணம். தென்னிலங்கையிலே இருக்கின்றவர்கள் எதிர்ப்பதற்கான காரணம் இதைக் கொடுப்பதன்மூலம் நாடு பிரிந்துவிடும் என்று. இந்த நாடு பிரிந்துவிடும் என்ற கதை எப்படி என்பதை எவருக்குமே விளங்கமுடியாமல் இருக்கின்றது ஒரு நாட்டுக்குள்ளே அதிகாரம் பகிரப்படுகிறது. அது நாட்டைப் பிரித்துவிடும் என்கிறார்கள். இவர்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் வந்தபோது ஒற்றையாட்சிதான் இருந்தது. அப்போதுதான் நாங்கள் தனிநாட்டைக் கேட்டோம். தனிநாட்டைக் கேட்டு ஆயுதப் போராட்டத்தை நடத்தினோம். ஆகவே இதற்கு இந்த அரசியலமைப்பு முக்கியமல்ல. இந்த அரசுகள் எப்படி தமிழ் மக்களை நடத்துகிறார்கள் என்பதுதான் மிக முக்கியமான விடயம்.

தனிநாடு கேட்டுப் போராடப் போகிறார்களா அல்லது இந்த நாட்டுக்குள்ளே ஒன்றாக ஒரே பிரஜைகளாக இருந்து தாங்களும் இந்த நாட்டின் பிரஜைக்ள என்று தங்களைக் கருதி இந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களுடைய முழுமையான பங்களிப்பயும் கொடுக்கப்போகிறார்களா இதற்கு கொடுப்பதற்காக என்ன செய்யவேண்டும். இதைத்தான் அரசு யோசிக்க வேண்டும். வெறுமனே ஒரு நாலுபேர் ஐந்துபேர் போடுகின்ற கூச்சல்களால் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கத் தவறினார்களாக இருந்தால் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை இருக்கின்றபோது நிச்சயமாக இந்த நாடு பொருளாதார ரிதியிலும் மீண்டும் கட்டியெழுப்புவது என்பது மிக பெரிய கடினமான விடயமாக இருக்கும்.

ஒரு பகுதி மக்கள் இந்த நாடடினுடைய முன்னேற்றத்தில் முழுமையாக தங்களுடைய கவனத்தைச் செலுத்தவிலலை என்றால் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்தவில்லை என்றால் இந்த நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது. ஆகவே இந்த சபையிலே இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். கட்டாயமாக ஒரு நியாயமான தீர்வை கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறி முடிக்கின்றேன். நன்றி வணக்கம்.