இந்தியாவின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகனும் இந்திய இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அபிவிருத்தி பயணத்தில் இலங்கையையும் இந்தியா அரவணைத்து முன்னோக்கிச் செல்லும் என இதன்போது இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகன் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் இந்திய இணை அமைச்சருக்கு ஜனாபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் நன்றி பரிசும் வழங்கப்பட்டது.

இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு, ”சரஸ்வதி மண்டபம்” என பெயரிடுவதாக நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

கலாசார நிலையத்திற்கு நிதி அனுசரணை வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்  இந்திய அரசாங்கத்திற்கும் இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் இதன்போது ஜனாதிபதி நன்றி கூறினார்.

சிங்கள அரச தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்கு முன்னின்ற பொன்னம்பலம் இராமநாதன், சிங்கள கலையை உலகிற்கு எடுத்துச்சென்ற ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் மகாதேவா, G.G. பொன்னம்பலம் உள்ளிட்ட பல தலைவர்களையும்  ஜனாதிபதி இன்றைய நிகழ்வில் நினைவுகூர்ந்தார்.

இதன் காரணமாகவே  75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை  யாழ்ப்பாணத்திலும் நிகழ்த்துவதற்கு தமது அரசாங்கம் திட்டமிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன், யாழ். அபிவிருத்தி மற்றும் திருகோணமலை அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் இதற்கு இந்தியா முக்கிய பங்களிப்பு நல்குவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கையர்களாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

யுத்த சூழ்நிலையிலும் தமிழ் கலாசாரம் யாழிலும் புலம்பெயர் சமூகங்களாலும் பாதுகாக்கப்பட்டதாகவும் காலியில் சாகித்திய விழா நடத்துவது போன்று யாழிலும் சாகித்திய நிகழ்வை நடத்த வேண்டும் என கலாசார அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.

அத்துடன், வீழ்ந்துள்ள நாட்டை வளமான நாடாக உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும், புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கி பயணிப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

600 பேர் வரை அமரக்கூடிய  வகையில் 13 தளங்களுடன் யாழ். கலாசார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தில், மாநாட்டு மண்டபம், நவீன திரையரங்கு வசதிகள், டிஜிட்டல் நூலகம் ஆகியனவும் உள்ளன.

1.6 பில்லியன் ரூபா செலவில் யாழ். கலாசார நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.