ஒரு கிலோகிராம் நெல்லை 100 ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(12) நடைபெற்ற நெல் அறுவடை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். கிளிநொச்சி – பரந்தன் வயல்வெளியில் விவசாயிகளை சந்தித்த ஜனாதிபதி, விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

ஒரு கிலோகிராம் நெல்லை அரசாங்கத்தினூடாக 100 ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கான பொறிமுறையை ஒரு வாரத்திற்குள் ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் வட மாகாண அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பின்னர் கிளிநொச்சி பன்னங்கண்டி கிராம வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.