நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் பாரிய சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் இதனை  கூறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அரச செலவினங்களை மட்டுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய, நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தவிர, ஏனைய அத்தியாவசியமற்ற செலவுகளுக்கான ஒதுக்கீடுகளுக்கு நிதி அமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என மற்றுமொரு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிதி அமைச்சராக தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்படுகின்றார்.

இந்த பின்புலத்தில், தேர்தலுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.