தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானவை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துயுள்ளது.
அரச நிதியை கையாள்வதாகக் கூறி கடந்த வாரங்களில் அரசாங்கம் எடுத்த பல தீர்மானங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் விளைவை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்படுவதற்கு முன், அதற்கான நிதியை விடுவிக்குமாறு அரசஅச்சகம் விடுத்த கோரிக்கை மற்றும் தேர்தலுக்குப் பணம் இல்லை என திறைசேறி செயலாளர் கூறியமையும் இவற்றுள் அடங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த சில வாரங்களாக திறைசேரி செயலாளர், அரச அச்சகர் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகள், தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகளாக அமைந்தமை தௌிவாக புலப்படுவதாகவும், அதனூடாக மக்களின் வாக்குரிமை நகைப்புக்குட்படுத்தப்படுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு மக்களின் இறையாண்மையை பாதிக்கும் வகையில், சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேர்தலை தடுக்கும் இத்தகைய முயற்சிகள் முன்னெப்போதும் இடம்பெற்றதில்லை என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் செல்வாக்கற்ற நிறைவேற்று அதிகாரம் அல்லது அரசியலமைப்பிற்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச அதிகாரிகளும் தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செயற்பட
மறுப்பது அல்லது தவறுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாக்குரிமை என்பது அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும்.
திட்டமிட்ட திகதியில் தேர்தலை நடத்தாமல் இருப்பது அல்லது ஒத்திவைப்பது பாரிய சட்ட மீறலாகும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.
அரசியலமைப்பில் அறிவிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அனைத்து அரச நிறுவனங்களாலும் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் எனவும் அவை கட்டுப்படுத்தப்படவோ மறுக்கப்படவோ கூடாது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாக்குரிமையில் தலையிடும் எந்தவொரு நடவடிக்கையும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் வாக்குரிமையில் தலையிடுவதற்கு பல வருடங்களாக பல்வேறு நிர்வாக சபைகள் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் இன்றியமையாத நடவடிக்கையான தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்குவதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் புனிதமான கடமையாகும்.
அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு மதிப்பளித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் சீர்குலைக்கவோ அல்லது தடுக்கவோ முயற்சிக்காமல், திட்டமிட்டவாறு நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தையும் அனைத்து அரச அதிகாரிகளையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.