உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் அமைப்பினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் இராஜகிரிய – சரண வீதி இன்று பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு எதிராக சில அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திறைசேரி செயலாளர் உள்ளிட்டோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை அடுத்த மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாமற்போனால், அதனை அடிப்படை உரிமை மீறல் செயலாக அறிவிக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.