இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் எழிலன் உள்ளிட்ட 03 பேரை மன்றில் ஆஜராக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு மன்றில் ஆஜர்படுத்த முடியாமல் போனால், அதற்கான காரணத்தை இலங்கை இராணுவம் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி நேற்று (23) உத்தரவிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எழிலன் என்றழைக்கப்படும் சசிதரன், கந்தம்மான் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் கந்தசாமி , கொலம்பஸ் என்றழைக்கப்படும் சின்னத்துரை உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் ஆகியோர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.