கொழும்பில் தேசிய மக்கள் சக்தி இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை நடத்திய நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரியும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்தது.

இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்த கட்சியின் பிரதிநிதிகள் உட்பட 26 பேருக்கு கொழும்பு வைத்தியசாலை சதுக்க வலயத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டது. மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த தடை உத்தரவை பிறப்பித்தது. இதன்படி, தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, இருதய வைத்தியசாலை மற்றும் மருதானை பிரதான வைத்தியசாலை சதுக்கங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய வகையில் போராட்டக்காரர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் தடையுத்தரவு வழங்கப்பட்டது.

லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து டீன்ஸ் வீதி, சீமன்ஸ் சந்தி வரையிலான வீதி மற்றும் நடைபாதைகளை மறித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.இதேவேளை, ஜனாதிபதி மாளிகை மற்றும் நிதி அமைச்சின் அலுவலகம் மற்றும் காலி முகத்திடலுக்குள் இந்த 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றமும் இன்று காலை தடை விதித்தது. எனினும் அமைதியான முறையில், பொது சொத்துக்களுக்கு பாதிப்பின்றி போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என இந்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கொழும்பு ஜனாதிபதி மாளிகை மற்றும் நகர மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், உள்ளுராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி, இன்று பிற்பகல் 3மணியளவில் கொழும்பு விகாரமாதேவி பூங்கா வளாகத்திற்கு அருகில் ஆரம்பமானது. அங்கிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்ற நிலையில், கொழும்பு நகர மண்டப பகுதியில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன் வீதித்தடையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் காவல்துறையினருடன் கலந்துரையாடி, பேரணியை அமைதியாக முன்னெடுத்து செல்ல அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தனர். எனினும், காவல்துறையினர் அந்த கோரிக்கையினை நிராகரித்திருந்தனர். இந்தநிலையில், பேரணியில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்ட சந்தர்ப்பத்தில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தினர்.  இதனையடுத்து, தேசிய மக்கள் சக்தியினர் கொழும்பு நகர மண்டப பகுதியிலேயே கூட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த மோதல்களில் சிக்கி 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.