வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பெற்றுக்கொடுக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்க இன்று (01) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 3 ஆம் வாரத்தில் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் குறித்த யோசனையை முன்வைக்கவும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தேர்தலுக்கான நிதியை விடுவிப்பது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை நேற்று சந்தித்து வலியுறுத்தினர்.
இந்த யோசனையும் கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்கு ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் இணங்கவில்லை.
மார்ச் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு இன்று பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.