நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  மீண்டும் கூடி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் நேற்று (03) வழங்கிய தீர்ப்பிற்கமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி குறித்து எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அறிவிப்பதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்க்குமாறு  நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.