வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாத நிலை காணப்படுவதாக அரச அச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 17 மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த வாக்குச்சீட்டுகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் திகதி அச்சிடப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகம் கூறியுள்ளது.
அதில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அரச அச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் தாமதமடையும் என இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான நிலை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில், ஆணைக்குழு கூடி தீர்மானம் எடுக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி தபால் நிலையத்திடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.