சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸின் பொரளை பகுதியிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்பவரின் வழக்கில், சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையாகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘ஹரக் கட்டா’ என்பவரினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர்களின் உறவினர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், நேற்றைய தினத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ள சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது சட்டவாட்சி, ஜனநாயகம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் மக்களதும் சமுதாயத்தினதும் உரிமைகள் என்பவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் அறிக்கை விடுத்துள்ள அவர், சட்டத்தரணிகள் சங்கம் அதன் உறுப்பினர்களது நல்வாழ்வு மற்றும் ஆர்வங்களை பாதுகாத்து மேம்படுத்துவதற்காக வலுவானதும் துடிப்பானதுமானதொரு நிறுவனமாகவே இனிவரும் காலங்களிலும் காணப்படுமென்பது தமது நம்பிக்கையாகும் என தெரிவித்துள்ளார்