சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்தியா தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்த உதவி உறுதுணையாக இருக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அரிந்தம் பாக்ஜி ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் காலத்தில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற வெளிப்படைத்தன்மையான நடைமுறைகளை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கடன் தொடர்பில் இந்தியாவே முதன் முறையாக மறுசீரமைப்பை சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்வைத்ததாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை அதிகாரிகள் அதன் வர்த்தகக் கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி விளக்கமளிப்புகளை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியை அங்கீகரித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்குத் தேவையான திறமையான வெளிப்படையான செயற்படுத்தல் அவசியம் என்ற அடிப்படையிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பப்படுவதாக திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.