இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமொன்றுக்கு திருகோணமலை – சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சம்பூர் நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்ட இடத்திலேயே, 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனைத் தவிர 23.6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சம்பூரில் இருந்து கப்பல்துறை வரையிலான 40 கிலோமீட்டர் தூரம் கொண்ட 220 கிலோவாட் மின்மாற்றுவழியை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ், 85 மெகாவாட்டுன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரையில் 220 கிலோவாட் இயலளவுடன் கூடிய 76 கிலோமீட்டர் தூரம் கொண்ட மின்மாற்றுவழியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை 2024 முதல் 2025 வரையிலான இரு ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் மீள்புதுப்பிக்கத்தக்க துறையின் ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டு ஏனைய பகுதிகளிலும் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்த்திணிவு சார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் என்பன இந்த இணக்கப்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.