வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.
ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களம், இந்து கலாச்சார அமைச்சு, பிரதமர், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அனைவருக்கும் பிரேரணைகள் கையளிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடமும், ஜனாதிபதிக்கான மகஜர் ஜனாதிபதியின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் அவர்களிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை, நகர, பிரதேச, சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி வேட்பாளர்கள், பொது அமைப்புக்கள், ஏனைய அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.