இலங்கையில் கடுமையான குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் 60க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை செய்துள்ளது. இந்தநிலையில் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை இந்த பரிந்துரைகளை வரவேற்றுள்ளன.
அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பால் அடையாளம் காணப்பட்ட ஏராளமான மீறல்களை நிவர்த்தி செய்வதற்கும் அதன் பரிந்துரைகளை தாமதமின்றி செயல்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் நாட்டின் ஆறாவது காலகட்ட அறிக்கையை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு அதன் இறுதி அவதானிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி இலங்கை அரசாங்கம் கவனிக்க வேண்டிய மூன்று முன்னுரிமைப் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு அடையாளம் கண்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவனவே அந்த மூன்று முன்னுரிமை பிரச்சினைகளாகும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரை அந்த அமைப்பு பாரிஸ் கோட்பாடுகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதிசெய்யவும் அதன் உறுப்பினர்களின் நியமனச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அதன் ஆணையை அனைத்துப் பகுதிகளிலும் திறம்படவும் சுதந்திரமாகவும் செயல்படுத்த போதுமான ஆதாரங்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஊடாக 12 மாதங்கள் வரை குற்றஞ்சாட்டப்படாமல் நீண்டகால விசாரணைக்காவல் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் தமிழர்கள் அரசாங்க விமர்சகர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான அடக்குறை மற்றும் சித்திரவதை மூலம் ஒப்புதல் மூலங்களைப் பெறுதல் நிறுத்தப்படல் வேண்டும்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை இரத்து செய்து பயங்கரவாதத்தின் குறுகிய வரையறையை உள்ளடக்கிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அந்த குழு வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகள்இ கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது விவகாரங்களில் பங்கேற்பது போன்ற பிரச்சினைகளும் மனித உரிமைகள் குழுவினால் அடையாளம் காணப்பட்ட கவலைக்குரிய சில பிரச்சினைகளுக்குள் உள்ளடங்குகின்றன.
இதேவேளை நிதிப் பற்றாக்குறையின் காரணமாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு பரிந்துரைத்துள்ளது.