வேதனமல்லா விடுமுறையின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்களுக்கான அடிப்படை வேதனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த வேதனம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரச பணியாளர்கள் 3,000 பேர் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதுடன், அவர்களுக்கு தாபனக்கோவை விதியின் ஏற்பாடுகளுக்கமைய வேதனமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளமையால், அவர்களின் வேதனமற்ற விடுமுறைக்கான காலம் நீடிக்கப்படுகின்றமையால் குறித்த அலுவலர்கள் பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள அரச அலுவலர்களுக்காக கடந்த மார் 09 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய குறித்த அலுவலர்களின் அடிப்படைச் வேதனத்தை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான யோசனையை, அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்திருந்தார்.