கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே இந்திய –  இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று(08) பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளார்.

சர்வதேச கடல் எல்லை கோட்டை தாண்டிச்செல்லும் நிகழ்வுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்படுகின்றமை தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டலின் தெரிவித்துள்ளார்.

இதனால் பாக் வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே, பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளிப்பது தொடர்பாக இலங்கை அரசை வலியுறுத்துமாறும் அவர் இந்திய பிரதமரிடம் கையளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, கடந்த வருடம் மே மாதம் 26 ஆம் திகதி தமிழ் நாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டிருந்த போது, அங்கு உரை நிகழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என கூறியிருந்தார்.