கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதை தொடர்ச்சியாக தாமதமப்படுத்தி வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்குள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு, அரசியல் கட்சிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு, கடந்த வாரம் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கணக்கறிக்கைகளை உரிய முறையில் இதுவரை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை முடிவுறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.